இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்து வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அரசியலுக்குச் சொந்தக்காரர். பாஜகவை மிகத் துணிச்சலாகத் தொடர்ந்து எதிர்த்து வரும் அவர், ஐந்து மாநில தேர்தலில்களில் உ.பி, கோவா உள்ளிட்ட சில மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். கட்சியில் பல்வேறு சிக்கல்கள் அடிக்கடி ஏற்பட்டு வரும் நிலையிலும் துணிச்சலாக அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை, வாரணாசியில் இருந்து மம்தா பானர்ஜியை ஏற்றிக்கொண்டு கொல்கத்தாவிற்கு சென்ற தனி விமானம் காற்றின் வேகத்தால் நிலையற்றத் தன்மையை எதிர்கொண்டது, இதனால் விமானம் குலுங்கியதில் தனது முதுகுப்பகுதியிலும் நெஞ்சிலும் காயம் அடிபட்டதாக மம்தா கூறியிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, தனி விமானத்தில், சுமார் 6000 அடி உயரத்தில் பறந்தபோது அதற்கு நேர் எதிரே மற்றொரு விமானம் திடீரென வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி தன்னுடைய சாதுரியத்தால் விமானத்தை மாற்றுப் பாதையில் செலுத்தி பத்திரமாகத் தரையிறக்கினார். விமானிக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல் எப்படி ஒரு விமானம் நேர் எதிரே வர இயலும். விமானியின் முயற்சியால் நான் தற்போது பத்திரமாகத் தரையிறங்கி உள்ளேன், இதில் சிறிது தவறு நடந்திருந்தாலும் பெரிய விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புக்கள் அதிகம்" என்றார்.