கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் பலியானார்கள். இந்தத் தொற்றை கட்டுப்படுத்த உலகில் உள்ள மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உட்பட அனைவரும் பல்வேறு ஆய்வுகளை செய்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற தீவிர முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.
இதில், இந்த நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் போன்ற தடுப்பூசிகளை வழக்கத்தில் கொண்டு வந்து அதை மக்களும் தவாறாமல் போட்டு வந்தனர். கோவாக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்தது. அதே போல், மற்றொரு தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆல்டிராஜெனேகா நிறுவனமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து கண்டுபிடித்தது.
இதில், கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியான கோவிஷீல்டை, மத்திய அரசு அனுமதியுடன் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம் தயாரித்தது. இந்தத் தடுப்பூசியின் செயல்திறன் 70 சதவீதம் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்த இரண்டு வகையான தடுப்பூசிகளை, உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தினர். இதனால், இந்த நோய்த் தொற்று பரவலாக குறைந்து வந்து மக்களை பெருமூச்சடைய செய்தது.
தடுப்பூசிகளை பயன்படுத்தி நோய் தொற்றைக் கட்டுப்படுத்தி வந்த அதே வேளையில், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொண்ட பின்னர் மரணங்களும், உடல்நல பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக பல புகார்கள் எழுந்தது. இந்தப் புகார்களை அடுத்து, இங்கிலாந்து நீதிமன்றத்தில், கோவில்ஷீல்டு கண்டுபிடிப்பு நிறுவனமான ஆல்டிராஜெனேகாவுக்கு எதிராக 50க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஆல்டிராஜெனேகா நிறுவனத்தோடு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் சேர்ந்து அறிக்கை ஒன்று தாக்கல் செய்துள்ளது.
அந்த அறிக்கையில், ‘கோவிட் தடுப்பூசியான கோவிஷீல்டு சில நேரங்களில் ஏதேனும் ஒரு சிலருக்கு பக்கவிளைவுகளை தரலாம். ஏதேனும் ஒரு சிலருக்கு இது போன்ற பாதிப்பு வருவது அரிதான விஷயம்தான். ரத்தத்தில் உறைதல் ஏற்படலாம், டிடிஎஸ் எனப்படும் (Thrombosis with Thrombocytopenia Syndrome ) பாதிப்பு வரலாம். இது எல்லோருக்கும் வருவதில்லை, மிக அரிதாக நடக்கலாம்’ எனத் தெரிவித்துள்ளது.