கேரளாவில் உள்ளாட்சித் தோ்தல் கடந்த 8, 10, 14 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடந்தது. தோ்தலில் பதிவான வாக்குகள் 244 மையங்களில் இன்று (16-ஆம் தேதி) எண்ணப்பட்டது. போட்டியிட்ட மூன்று பிரதான கட்சிகளான கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பா.ஜ.கவின் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளும் தொண்டர்களும் வாக்கு எண்ணும் மையங்களின் வெளியே கொடிகளுடன் குவிந்துநின்றனர்.
வழக்கம் போல் தலைநகரமான திருவனந்தபுரமும் முதல்வர் பிணராய் விஜயனின் சொந்த மாவட்டமான கண்ணூாிலும் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது. வாக்கு எண்ணப்பட்ட ஒரு சில மணி நேரத்திலே முடிவுகள் வெளிவரத் தொடங்கின. பஞ்சாயத்து வார்டுகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை சட்டமன்றத் தோ்தலில் வெற்றி பெற்ற ரேஞ்சுக்கு அந்தந்த கட்சியினர் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். வெற்றிபெற்ற பெண் வேட்பாளர்களைக் கூட தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்.
இதில் நடந்து முடிந்த மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம், கிராமப் பஞ்சாயத்துகளின் மொத்த முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தமுள்ள 6 மாநகராட்சியில் கம்யூனிஸ்ட் 4-ம் காங்கிரஸ் 2-ம் பிடித்தது. அதில் முக்கியமாக எதிர்பார்க்கபட்ட திருவனந்தபுரம் மாநகராட்சியைத் தொடர்ந்து மீண்டும் கம்யூனிஸ்ட் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 52 வார்டுகளைக் கைப்பற்றி தக்க வைத்துள்ளது. மேலும் பா.ஜ.க கடந்த முறை போல் 35 வார்டுகளைக் கைப்பற்றி 2-ஆம் இடத்திலும் காங்கிரஸ் 10 வார்டுகளைப் பிடித்து மூன்றாம் இடத்துக்கும் தள்ளப்பட்டது. இதில் கம்யூனிஸ்ட் மேயர் வேட்பாளராக குன்னுகுழி வார்டில் போட்டியிட்ட ஒலினா தோல்வியடைந்தது கம்யூனிஸ்ட்டுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் அந்த வார்டில் தான் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் உள்ளது.
இதேபோல் மொத்தமுள்ள 86 நகராட்சியில் காங்கிரஸ் 45-ம் கம்யூனிஸ்ட் 35-ம் பாஜக 2-ம் மற்றவர்கள் 4-ம் பிடித்துள்ளனர். மாவட்டப் பஞ்சாயத்தைப் பொறுத்த வரை மொத்தமுள்ள 14-ல் கம்யூனிஸ்ட் 10-ம் காங்கிரஸ் 4-ம் பிடித்தன. 152 ஊராட்சி ஒன்றியங்களில் 108 கம்யூனிஸ்ட்டும், 44 காங்கிரசும் கைப்பற்றியுள்ளது. 941 கிராமப் பஞ்சாயத்துகளில் கம்யூனிஸ்ட் 515-ம் காங்கிரஸ் 376-ம் பாஜக 22-ம் மற்றவர்கள் 28-ம் பிடித்துள்ளனர்.
ஆளும் கட்சி கம்யூனிஸ்டாக இருந்தாலும் உள்ளாட்சித் தோ்தலில் பா.ஜ.க திருவனந்தபுரம் மாநகராட்சி உட்பட கணிசமான இடங்களைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த மாதிாியான முடிவை பா.ஜ.கவினர் கொஞ்சமும் எதிா்பாா்த்து இருக்க மாட்டார்கள். ஆனால், கிராமப் பஞ்சாயத்து வார்டுகளில் அதிக இடங்களைக் கைப்பற்றி முன்னேற்றம் அடைந்துள்ளது. இதேபோல் காங்கிரஸ் கம்யூனிஸ்டை 2-ம் இடத்துக்குத் தள்ளும் என்றும் தொலைக்காட்சியில் விவாதங்களில் ஈடுபட்டவர்கள் கூறிய நிலையில் எல்லாம் மாறி விட்டது.