கேரள மாநிலம் இடுக்கி அருகே சாலையின் திருப்பத்தில் திரும்பும்போது கல்லூரிப் பேருந்து 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
கேரள மாநிலம் இடுக்கி அருகே 44 கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் சென்றுகொண்டிருந்த கல்லூரிப் பேருந்து கல்லார்குட்டி - மயிலாடும்பாறை வழித்தடத்தில் முனியாறு கொண்டை ஊசி வளைவில் பேருந்து திரும்ப முற்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
பேருந்து கவிழ்ந்து பெரும் சத்தம் எழுந்த நிலையில் அருகில் இருந்த மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மேலும் தகவல் அறிந்து அங்கு வந்த மீட்புப் படையினர் மாணவர்களைப் பத்திரமாக மீட்டனர். எனினும் மில்ஹாஜ் என்ற மாணவர் சடலமாக மீட்கப்பட்டார். முதலில் காணாமல் போனதாக நினைக்கப்பட்டது. இதன் பின் மில்ஹாஜ் பேருந்தின் அடியில் சிக்கி உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஒரு மாணவர் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டார். தற்போது அவர் கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வெள்ளத்தூவல் போலீசார் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். விடுமுறை தொடர்ந்து இருந்ததால் மாணவர்கள் தொழில்முறைப் பயணம்(ஐவி) மேற்கொண்டதும் பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பும் பொழுது விபத்து நிகழ்ந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.