கோயம்புத்தூர்- சீரடி இடையே இயக்கப்பட்ட ரயில் தனியார் ரயில் அல்ல; அது சுற்றுலா ரயில் என நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
பாரத் கவுரவ் (Bharat Gaurav Trains) திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர்- சீரடி இடையே ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இது தனியார் ரயிலா? இந்திய ரயில்வே கட்டணங்களுக்கு இணையாக உள்ளதா? வேறு பகுதிகளில் தனியார் ரயில் இயக்கக் கூடிய திட்டம் உள்ளதா? என மக்களவையில் உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "பாரத் கவுரவ் ரயில் என்பது சுற்றுலா ரயில். இது இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம், வரலாற்று இடங்களை, இந்திய மக்களுக்கும், உலக மக்களுக்கும் காண்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சர்கியூட் ரயில். இந்த ரயில் இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் வழக்கமான ரயில்களுக்கு மாறுபட்டது. பயனாளர்களுக்கு உணவு, தங்குமிடம், உள்ளூரைச் சுற்றிப்பார்க்கக் கூடிய வசதிகள் பேக்கேஜ் அடிப்படையில், வழங்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தனியார் வசம் ரயில்கள் ஒப்படைக்கப்பட்டு, இயக்கக்கூடிய திட்டம் இப்போதைக்கு இல்லை என்றும், எழுத்துப்பூர்வ விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.