மணிப்பூர் மக்கள் பெண்களைத் தாயாக மதிப்பார்கள் என மணிப்பூர் முதல்வர் பிரேன்சிங் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது. இந்தக் கொடூர சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி மணிப்பூர் போலீசார் 4 பேரைக் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் மணிப்பூர் மக்கள் பெண்களைத் தாயாக மதிப்பார்கள் என முதல்வர் பிரேன்சிங் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “மணிப்பூர் மாநில மக்கள் பெண்களைத் தாயாக மதிப்பார்கள். ஆனால், இரண்டு பழங்குடியின பெண்களைத் தாக்கி நிர்வாணப்படுத்திய குற்றத்தால் மாநிலத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது. கலவரத்தில் சில குண்டர்கள் இதனைச் செய்து எங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து மாநில முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளோம். குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வாங்கித் தர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மரண தண்டனைக்கான சாத்தியத்தைக் கருத்தில் கொள்வது உட்பட அனைத்து குற்றவாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை எனது தலைமையிலான பாஜக அரசு உறுதி செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.