இந்தியா சார்பில் சந்திரயான்-3 கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம் - 3 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. அதனைத் தொடர்ந்து பூமியின் நீள்வட்டப் பாதையைச் சுற்றி வந்த சந்திரயான் - 3 இன் உயரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் பணியை விஞ்ஞானிகள் செய்து வந்தனர். பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட புள்ளியில் பூமியின் ஈர்ப்பு விசையும் நிலவின் ஈர்ப்பு விசையும் சரிசமமாக இருக்கும் இடத்தில் உந்து சக்தி இயந்திரத்தைப் பயன்படுத்தி சந்திரயானை நிலவின் ஈர்ப்பு விசைப் பகுதிக்குள் செலுத்தி வந்தனர்.
நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான் - 3 விண்கலத்தின் பயணத்தில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சந்திராயன் 3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து லேண்டர் பிரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சந்திரயான் - 3 விண்கலம் வரும் 23 ஆம் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கும் முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைக்க உள்ளது.
இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. விக்ரம் லேண்டரில் உள்ள கேமரா நிலவின் மேற்பரப்பை மிக அருகிலிருந்து துல்லியமாக புகைப்படம் எடுத்து அனுப்பியதாக இஸ்ரோ சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. லேண்டரின் சுற்றுப்பாதையின் உயரம் மேலும் குறைக்கும் நடவடிக்கை இன்று மாலை 4 மணிக்கு மேற்கொள்ளப்படுகிறது. தற்பொழுது விக்ரம் லேண்டர் அனுப்பிய இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. நிலவில் உள்ள மேடு, பள்ளங்கள் மற்றும் மேற்பரப்பின் தன்மை ஆகியவை இந்த புகைப்படங்களில் இடம் பெற்றுள்ளன. இதற்கு முன்னரே நிலவின் புகைப்படங்களை லேண்டர் அனுப்பியிருந்தாலும் இந்த தெளிவான புகைப்படம் இஸ்ரோவிற்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்துள்ளது.
சந்திரயான் - 3 திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும் பட்சத்தில் நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற உள்ளது. ஏற்கனவே நிலவில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே தரையிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.