![Class 10 student issue in andhra](http://image.nakkheeran.in/cdn/farfuture/7ZlqsMxqB9QwjwJvQwfKACRMfAssCJfxbc6mm_qre2c/1686966544/sites/default/files/inline-images/998_110.jpg)
ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவன் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே அமர்நாத் என்ற சிறுவன் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கு அர்ஜுன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நண்பர் உள்ளார். இந்த நிலையில் அர்ஜுன், அமர்நாத்தின் அக்காவிடம் தவறாக நடந்துகொண்டுள்ளார். இதனை அமர்நாத் கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்த நிலையில் அமர்நாத் நேற்று டியூசன் முடித்துவிட்டு தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தனது சக நண்பர்கள் 4 பேருடன் வந்த அர்ஜுன், அமர்நாத்தின் மேல் பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துக் கொளுத்தியுள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அமர்நாத்தை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அமர்நாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அமர்நாத் இறப்பதற்கு முன்பு தனது மரண வாக்குமூலத்தில் அர்ஜுன் மற்றும் அவரது நண்பர்களின் பெயர்களைக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அர்ஜுன் மற்றும் அவரது நண்பர்களைத் தேடி வருகின்றனர்.