நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இதில் நீட் தேர்வில் முறைகேடுகள் அரங்கேறி இருப்பதால் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று மனுதாரர்களின் தரப்பில் இருந்து வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, வினாத்தாள் கசிவின் காரணமாகத் தேர்வின் புனிதம் மொத்தமாக மீறப்பட்டடற்கான ஆதாரம் இல்லை என்பதால், நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.
இதனிடையே இந்த வழக்கின் வாதத்தின் போது தலைமை நீதிபதி சந்திர சூட்டிற்கும், மூத்த வழக்கறிஞருக்கும் இடையே நடந்த காரசார விவாதம் தற்போது பேசுப் பொருளாக மாறியுள்ளது. வழக்கின் விசாரணையின் போது, மனுதாரர்களில் ஒருவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நரேந்தர் ஹூடா தனது தரப்பு வாதங்களை முன்வைத்துக் கொண்டிருந்தார். அப்போது, இடையே மூத்த வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாறை குறுக்கிட்டுப் பேசினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூட், “நரேந்தர் ஹூடா தனது வாதத்தை முடித்தவுடன் நீங்கள் பேசலாம்; தற்போது அமைதியாக இருங்கள்” என்று கூறியிருக்கிறார். இதையடுத்து, “இங்கு இருப்பவர்களில் நான் தான் மிகவும் மூத்த வழக்கறிஞர்; என்னால் அவருக்குப் பதில் கூறமுடியும். நான் நீதிமன்றத்தின் அமிகஸ்(amicus)” என்று மேத்யூஸ் நெடும்பாறை கூற, உடனே தலைமை நீதிபதி சந்திரசூட், “நான் அப்படி யாரையும் நியமிக்கவில்லையே” என்றார்.
இதையடுத்து, “என்னை அவமதித்தால் நான் இங்கிருந்து வெளியேறிவிடுவேன் என்று மேத்யூஸ் தெரிவிக்க, ஆத்திரமடைந்த தலைமை நீதிபதி, “உங்களைக் கடுமையாக எச்சரிக்கிறேன்; இதுபோன்று நீதிமன்றத்தில் பேசக்கூடாது; இங்கு நான்தான் தலைமை வகிக்கிறேன். காவலர்களே..! இவரை நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றுங்கள்” என்று கூறினார்.
இதற்கு மேத்யூஸ், “நானே இங்கிருந்து செல்கிறேன்” என்றார். உடனே தலைமை நீதிபதி, “அதை நீங்கள் சொல்லத் தேவையில்லை; நீங்கள் இங்கிருந்து வெளியேறலாம். 24 ஆண்டுகளாக நீதித்துறையைப் பார்க்கிறேன்; நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆணையிட அனுமதிக்க முடியாது” என்று கடிந்துகொண்டார். இருப்பினும், “நான் 1979 ல் இருந்தே பார்த்து வருகிறேன்” என்று மேத்யூஸ் கூற, ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற தலைமை நீதிபதி, “இனியும் தொடர்ந்து பேசினால் நீதிமன்ற அவமதிப்பு உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” என எச்சரிக்க இறுதியாக அங்கிருந்து வெளியேறினர் மேத்யூஸ் நெடும்பாறை. பின்னர் நீதிமன்றத்திற்குள் வந்த மேத்யூஸ் நெடும்பாறை, தலைமை நீதிபதி சந்திர சூட்டை அவமதித்தற்காக மன்னிப்பு கோரினார்.
தலைமை நீதிபதி மேத்யூஸ் நெடும்பாறையை கடிந்துகொண்டது இது ஒன்று முதல் முறை அல்ல; தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கின் விசாரணையின் போதும் இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடந்து இறுதியில் தலைமை நீதிபதி கடிந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.