இந்தியா மற்றும் சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்தாண்டு மோதல் வெடித்தது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தார்கள். இந்த மோதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், நால்வர் மட்டுமே உயிரிழந்ததாகச் சீனா கூறியுள்ளது.
இந்த மோதலைத் தொடர்ந்து இந்தியா - சீனா இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. படை விலக்கல் தொடர்பாகவும், படை குறைப்பு தொடர்பாகவும் இரு நாடுகளிடையே சில தீர்மானங்கள் எட்டப்பட்டன. அந்த தீர்மானங்கள் படிப்படியாக அமலுக்கு வருகின்றன. அதேபோல் இருநாடுகளுக்குமிடையே தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி, நூற்றுக்கும் மேற்பட்ட சீன இராணுவத்தினர் 55 குதிரைகளுடன் துன் ஜுன் லா கணவாயைக் கடந்து, உத்தரகண்ட் மாநிலத்தின் பராஹோட்டி பகுதிக்குள் ஊடுருவியதாகவும், இந்திய எல்லைக்குள் ஐந்து கிலோமீட்டர் வரை வந்த அவர்கள் மூன்று மணிநேரம் இந்திய எல்லைக்குள் இருந்ததாகவும் பாதுகாப்புப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இந்திய எல்லைக்குள் வந்த அவர்கள், பாலம் உள்ளிட்ட இந்தியாவில் சில அடிப்படை கட்டமைப்பை சேதப்படுத்தியதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. சீன இராணுவ வீரர்கள் நுழைந்த பகுதி இராணுவமற்ற பகுதி என்றும், உள்ளூர்வாசிகள் சீன வீரர்கள் குறித்து இந்திய இராணுவத்திற்கு தகவல் அளித்ததாகவும் தெரிவித்துள்ள பாதுகாப்புப்படை வட்டாரங்கள், சீன இராணுவத்தினர் இருப்பை உறுதி செய்ய இந்திய இராணுவமும், இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை படையும் ரோந்து படை ஒன்றை அனுப்பியதாகவும் அதற்குள் சீன வீரர்கள் திரும்பச் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளன.
ஏற்கனவே லடாக்கில் சீனாவுடன் நிலவி வரும் எல்லைப்பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில், தற்போது சீன வீரர்கள் உத்தரகாண்டில் ஊடுருவியதாகத் தகவல் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.