இந்தியா மற்றும் சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்தாண்டு மோதல் வெடித்தது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தார்கள். இந்த மோதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், நால்வர் மட்டுமே உயிரிழந்ததாக சீனா கூறியுள்ளது.
இந்த மோதலைத் தொடர்ந்து இந்தியா - சீனா இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. படை விலக்கல் தொடர்பாகவும், படை குறைப்பு தொடர்பாகவும் இரு நாடுகளிடையே சில தீர்மானங்கள் எட்டப்பட்டன. அந்த தீர்மானங்கள் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. இந்த சூழலில், சீனாவின் முரண்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, அண்மையில் 50,000 கூடுதல் வீரர்களை சீன எல்லையில் இந்தியா குவித்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே நேற்று இந்திய மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து எல்லை பிரச்சனை குறித்து விவாதித்தனர். இந்தநிலையில் எல்லையில் உண்மை கட்டுப்பாட்டு கோட்டிற்கு அருகே சீனா நிரந்தர கான்க்ரீட் முகாம்களை அமைத்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளன. அதுபோன்ற முகாம்களில் ஒன்று நகு லா அருகே அமைக்கப்பட்டு வருவதாகவும், அங்கிருந்து கடந்த வருடம் இந்திய - சீன வீரர்கள் மோதிக்கொண்ட இடத்திற்கு சில நிமிடங்களில் சென்றுவிடலாம் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் கிழக்கு லடாக்கிற்கு அருகிலும், அருணாச்சல பிரதேசத்திற்கு அருகிலும் இது போன்ற முகாம்கள் அமைக்கபட்டிருப்பதை காண முடிவதாகவும், இந்த கட்டுமானங்கள், இந்திய பிராந்தியத்திற்கு அருகே தங்களது படைகளை நிலை நிறுத்தவும், தேவைப்படும்போது படைகளை விரைவாக நகர்த்தவும் சீனாவிற்கு உதவும் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.