கேரளாவில் குழந்தைகளைப் பயன்படுத்தி விநோத ஊர்வலம்- குழந்தைகள் நலவாரியம் நோட்டீஸ்!
கேரள மாநிலத்தில் கிருஷ்ணனைப் போல வேடமிட்ட குழந்தையை, செயற்கையாக தயாரிக்கப்பட்ட இலையில் கட்டி தொங்கவிட்டு ஊர்வலமாக சென்ற விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி கேரள மாநிலம் பயனூர் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா ஊர்வலம் சங்பரிவார் அமைப்புகளால் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஐந்து வயதுமிக்க கிருஷ்ணனைப் போல வேடமிட்ட குழந்தையை, செயற்கையாக செய்யப்பட்ட இலையில் கட்டி தொங்கவிட்டுள்ளனர். இதனை படமெடுத்த பயனூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் பிரபாகரன் என்னும் சமூக செயற்பாட்டாளர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். மேலும், குழந்தைகள் நல்வாழ்வு மையத்திலும் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதனால், அவருக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடப்பட்டு வருகிறது.
இந்த தகவலை அறிந்த கேரள மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு மையம் தானாக முன்வந்து பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும், இந்த அமைப்பு மாநில உள்துறை செயலர், மாநில தலைமை காவல்துறை அதிகாரி, மாவட்ட காவல்துறை உயரதிகாரி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்டோரிடம் இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
- ச.ப.மதிவாணன்