மத்திய அரசு மாநில அரசுகளைப் பிச்சைக்காரர்களைப் போல நடத்துவதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கரோனா ஊரடங்கால் சரிவைச் சந்தித்துள்ள இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தப் பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார மீட்பு திட்டத்தை அண்மையில் அறிவித்தார். இதனையடுத்து சுயச்சார்பு பொருளாதாரம் என்ற பெயரில் இதற்கான செயல் திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஆனால் மத்திய அரசின் இந்தத் திட்டம் வெறும் கண்துடைப்பு என்றும், மக்களுக்கு இதனால் உடனடி பலன்கள் எதுவும் கிடைக்காது எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், "மத்திய அரசு அறிவித்த சுயச்சார்பு பொருளாதாரத் திட்டம் உண்மையில் ஒரு மோசடித் திட்டம். வெறும் எண்களை மட்டும் கூறி மாநில அரசுகளுக்கும், மக்களுக்கும் மத்திய அரசு துரோகம் செய்கிறது.
மாநில அரசுகள் கடன் பெறுவதற்கு நகைப்புடைய கட்டுப்பாடுகளைக் கூறி மத்திய அரசு தன்னுடைய மரியாதையைத் தானே குறைத்துக்கொள்கிறது. சர்வதேச பத்திரிகைகள் நிதியமைச்சரின் அறிவிப்பைக் கிண்டல் செய்கிறார்கள். நிதியமைச்சர் உண்மையாகவே ஜி.டி.பி.யை உயர்த்தத் திட்டமிடுகிறாரா அல்லது ரூ.20 லட்சம் கோடி எண்ணை மட்டுமே வெளிக்காட்ட அறிவிப்புகளை வெளியிடுகிறாரா என்று கேட்கிறார்கள். இக்கட்டான இந்த நேரத்தில் பொருளாதார நிதித்தொகுப்பு என்பது மாநிலங்களுக்கு மிகவும் அவசியமானது. ஆனால், மத்திய அரசின் செயல்கள் எதேச்சதிகார மனப்போக்கைக் காட்டுகிறது. இதை நாங்கள் முழுமையாகக் கண்டிக்கிறோம். இதுபோன்ற திட்டங்களை நாங்கள் கேட்கவில்லை.
கரோனா வைரஸ் பாதிப்பால் மாநில அரசுகளின் நிதிநிலை மோசமாக இருக்கும் போது, மக்களுக்குத் தேவையான உதவிகளையும், திட்டங்களையும் செய்யவே நாங்கள் மத்திய அரசிடம் இருந்து நிதி கேட்கிறோம். ஆனால், நாங்கள் உங்களிடம் பணம் கேட்டால், நீங்கள் எங்களைப் பிச்சைக்காரர்கள் போல் நடத்துகிறீர்கள். மத்திய அரசு என்ன செய்கிறது? எனக் கேட்கிறேன். சீர்திருத்தங்கள் கொண்டுவரும் முறை இதுதானா? கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதும், மாநில அரசுகளைக் கட்டுப்படுத்த நினைப்பதும் வேதனையாக இருக்கிறது. பிரதமர் மோடி கூட்டாட்சி குறித்துப் பேசுகிறார். ஆனால், எல்லாம் போலித்தனமாகவும், வெறுமையாகவும் இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.