அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, கவுகாத்தியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் தரப்பில், காய்கறி உயர்வு குறித்த கேள்வி ஹிமந்த பிஸ்வா சர்மாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “கிராமங்களில் காய்கறிகளின் விலை அதிகமாக உயரவில்லை. இங்கு காய்கறி விற்கும் மியாக்கள், (வங்க மொழி பேசும் முஸ்லிம் வியாபாரிகள்) தான் அதிக விலை வைத்து விற்பனை செய்கிறார்கள். இதுவே அசாமைச் சேர்ந்த வியாபாரிகள் காய்கறிகள் விற்றால் தனது மக்களிடம் இப்படி கொள்ளை அடிக்கமாட்டார்கள். கவுகாத்தியில் உள்ள இந்த நடைபாதை கடைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகு அசாமைச் சேர்ந்தவர்கள் அதிகப்படியாக வியாபாரத்தில் ஈடுபட முன்வர வேண்டும்” என்று கூறினார்.
முஸ்லிம்களை மியாக்கள் என்ற இழி சொல்லைப் பயன்படுத்தி பேசிய முதல்வரின் கருத்துக்கு அசாமைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் தலைவர் பத்ருதீன் அஜ்மல் கருத்து தெரிவித்திருந்தார். அதில் அவர், “ஒரு மாநில முதல்வர் பதவியில் இருக்கும் அவரிடம் இருந்து இதுபோன்ற வார்த்தைகள் வரக் கூடாது. முதல்வர் கூறிய இந்த கருத்தால் முஸ்லிம்களின் உணர்வு காயப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் மதவாத அரசியலை பா.ஜ.க தூண்டி விடுகிறது. இதனால் ஏதாவது கலவரம் நடந்தால் அதற்கு அசாம் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, மாநில காங்கிரஸ் தலைவர் பூபென் குமார் போரா கூறியதாவது; “மக்களிடையே பிரிவினையை உண்டாக்க அசாமி, மியா என்ற சர்ச்சைக்குரிய வார்த்தைகளை முதல்வர் சர்மா பயன்படுத்தி இருக்கிறார். வேலையின்மை, விலைவாசி உயர்வு, சட்ட விரோத குடியேற்றம் போன்ற பிரச்சனைகளில் பா.ஜ.க தோல்வி அடைந்திருக்கிறது. அதனால், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பா.ஜ.க. அரசு மக்களின் கவனத்தை திசை திருப்ப மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியைத் தொடங்கிவிட்டது” என்று கூறினார்.