தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தனது டிஆர்எஸ் கட்சியைக் கலைத்துவிட்டு 'பாரத ராஷ்ட்ரிய சமிதி' என்ற கட்சியை வரும் விஜயதசமி நாளில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், 2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மாற்றாக வலுவான மாற்று அணியை அமைக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், வரும் அக்டோபர் 5- ஆம் தேதி அன்று விஜயதசமி நாளில் 'பாரத ராஷ்ட்ரிய சமிதி' என்ற தேசிய கட்சியைத் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கட்சி வரும் மக்களவைத் தேர்தலில் தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் 150 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், தங்கள் கட்சிதான் அடுத்த பிரதமரைத் தீர்மானிக்கும் நிலையில் இருக்கும் எனவும், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய தேசிய கட்சியைத் தொடங்கிய பின், டெல்லி, லக்னோ, பாட்னா ஆகிய வட மாநில நகரங்கள் ஏதேனும் ஒன்றில் பொதுக்கூட்டம் நடத்தவும் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளதாக அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது உள்ள தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி கலைக்கப்பட்டு, 'பாரத ராஷ்ட்ரிய சமிதி' என்ற தேசிய கட்சியாக மாற்றப்படவுள்ளது. ஆயினும் ரோஸ் நிற கொடி மற்றும் கார் சின்னம் ஆகியவற்றைத் தொடர்ந்து பயன்படுத்த சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார்.
பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோரும் பா.ஜ.க.வுக்கு மாற்றாக தேசிய அளவில் மாற்று அணி அமைக்க தீவிரம் காட்டி வரும் நிலையில் தெலங்கானா மாநில முதலமைச்சரும் அதில் முனைப்பு காட்டி வருகிறார்.