புதுச்சேரியில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாம், ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நடைபெற்றது. இதனை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, "இரண்டு தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். ஒமிக்ரான், டெல்டாக்ரான் என அனைத்து காரனும் வருவான். நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஒமிக்ரான் பரிசோதனை மாதிரிகள் பெங்களூருக்கு அனுப்புவதால் முடிவுகள் வர தாமதமாவதால் பரிசோதனைகளை சென்னைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதுச்சேரியிலும் பரிசோதனை கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பொங்கல் விழாவை அனைவரும் எச்சரிக்கையாக கொண்டாட வேண்டும். மக்களின் உணர்வுகளை அரசு மதிக்கிறது. கட்டுப்பாடுகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். காணும் பொங்கல் அன்று கூட்டம் கூடுவதை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. கரோனாவையும் கட்டுப்படுத்த வேண்டும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படுகிறோம். மக்கள் அச்சமடையத் தேவையில்லை. ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றார்.
'பேரிடர் மேலாண்மை தலைவரை ஆளுநர் செயல்பட விடுவதில்லை' எனும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் குற்றச்சாட்டு தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, "பேரிடர் மேலாண்மை ஆணையம் முதலமைச்சர் தலைமையில் செயல்படுகிறது. ஒரு மருத்துவர் என்ற முறையில் கரோனா சார்பான பேரிடர் முடிவுகளையும் செயல்பாட்டையும் கண்காணிக்கிறேன். தொடர்ந்து இதுபற்றி இருவரும் கலந்து ஆலோசித்து புதுச்சேரி மக்களுக்கு நல்லது நடக்க முதலமைச்சரும் நானும் இணக்கமாக இருக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.