மஹாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த அரசு ஊழியரான மோஹித் சுபாஷ் சவான் என்பவர், பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். இவருக்கு விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கினாலும், மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீனை ரத்துசெய்தது. இதனையடுத்து, அவர் கைது நடவடிக்கையிலிருந்து தப்புவதற்காக உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட நபரிடம், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணையே திருமணம் செய்துகொள்ளகிறாயா? எனக் கேட்டதாக தகவல்கள் வெளியாகின. இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. தலைமை நீதிபதி பதவிக்குக் கண்டனங்கள் குவிந்ததுடன், அவர் பதவி விலக வேண்டுமெனவும் குரல்கள் எழுந்தன.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அந்தச் சிறுமியின் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க அனுமதிகேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்த அவர், அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறாயா எனக் கேட்கவில்லை. அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ளப் போகிறாயா என்றுதான் கேட்டேன் எனக் கூறியுள்ளார்.