சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் வெளியிட்டார்.
தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பா.ஜ.க , காங்கிரஸ் என அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர்.
இதில், சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7ஆம் தேதி மற்றும் 17ஆம் தேதி என இரண்டுகட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற்று அன்றைய தேதியிலே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பாக தேர்தல் வாக்குறுதியை கொண்ட தேர்தல் அறிக்கையை நேற்று (05-11-23) வெளியிட்டது.
சத்தீகர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று ராஜ்நந்த்கான் பகுதியில் முதல்வர் பூபேஷ் பாகேல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அந்த தேர்தல் அறிக்கையில், ரூ.500 மானிய விலையில் எரிவாயு சிலிண்டர், விவசாயிகள் கடன் தள்ளுபடி, சாதிவாரி கணக்கெடுப்பு, மழலையர் வகுப்பு முதல் முதுநிலை படிப்பு வரை இலவசக் கல்வி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.