சத்தீஷ்கர் மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் குழந்தைகளைத் தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வைரலானது. இந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் சிறுமியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து தரையில் தூக்கி வீசுகிறார். அதன் பிறகு கன்னத்தில் அறைந்து சிறுமியைத் தூக்கி அருகில் உள்ள கட்டிலில் வீசி விட்டு மீண்டும் தாக்குகிறார். அந்த சமயத்தில் அருகில் உள்ள மற்றொரு சிறுமியையும் கட்டிலின் மீது தூக்கி வீசி அவரையும் தாக்குகிறார்.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட இளம்பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமிகளுக்கு உரிய சிகிச்சையும் பாதுகாப்பும் அளிக்க வேண்டும் என சமூக வலைத்தளங்கள் மூலம் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்டதில், சட்டீஸ்கர் மாநிலம் கான்கர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆதரவற்ற குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தில் எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது. இங்கு மாநில அரசு திட்டத்தின் கீழ் 6 வயதுக்குட்பட்ட அதரவற்ற குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு பணியாற்றும் கண்காணிப்பாளர் சீமா திவேதி தான் சிறுமிகளை அடித்து துன்புறுத்தியது உறுதியானது. இதையடுத்து மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் திவேதி மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு உத்தரவிட்டது. மேலும் கான்கர் மாவட்ட குழந்தைகள் நலத்துறை சார்ந்த அதிகாரியையும் தற்காலிகமாகப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.