டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு ரத்த பிளேட்லெட்க்கு பதிலாக பழச்சாறு ஏற்றியதாக தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் உத்திர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜில் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட 32 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அதனால் அவருக்கு உடனடியாக பிளேட்லெட் செலுத்த வேண்டும் எனவும் அந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து நோயாளிக்கு பிளேட்லெட் ஏற்றப்பட்டது. பின்னர் வேறு ஒரு மருத்துவமனைக்கு அந்த நபர் மாற்றப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பிளேட்லெட்க்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸை ஏற்றியதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் வீடியோ வெளியிட்ட நிலையில், துணை முதல்வரின் உத்தரவின் பேரில் அங்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த மருத்துவமனைக்கு சீல் வைத்து விட்டு சென்றனர்.