ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சாம்பாஜி பிதே, மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 'சிவ ப்ரதி ஹிந்துஸ்தான்' என்கிற அமைப்பை நடத்தி வருகிறார். சந்திராயன் -2 அனுப்பிய விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்க முடியாமல் போனதற்கான காரணத்தை இப்போது கண்டுபிடித்து வெளியிட்டு இருக்கிறார். அதாவது, நிலவை அடிப்படையாக வைத்து காலத்தை கணக்கிடும் முறைப்படி சுக்கிலபட்சத்தில் (வளர்பிறை) பதினோராவது நாளான ஏகாதசி திதியில் சந்திராயன் மிஷன் -2 ராக்கெட்டை அனுப்பி இருந்தால் அது வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அதை விட்டு விட்டு கிருஷ்ண பட்சத்தில் (தேய்பிறை) அனுப்பியதால்தான் முயற்சி தோல்வி அடைந்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.இவர் ஏற்கனவே தனது தோட்டத்தில் விளைந்த மாம்பழத்தை சாப்பிட்ட பல பிள்ளை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்திருப்பதாக சொல்லி பரபரப்பை கிளப்பியவர். இவரின் இந்த கருத்தை இணையவாசிகள் விமர்சித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.