2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்போதிலிருந்தே அத்தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்தநிலையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மஹாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரேவையும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, 2024 ஆம் தேர்தலில் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பது பற்றி மட்டுமின்றி, ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து பாஜக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களை தோற்கடிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போதைய நிலையில் குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் தேர்தல் நடைபெற்றால், பாஜக எளிதில் வெல்லும் என்ற சூழலில், உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தல்களில் பாஜக தோல்வியடையும் எனவும், அப்போது எதிர்கட்சிகளின் கூட்டணி பலம்பெறும் என சந்திரசேகர ராவ் கருதுவதகாவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த குடியரசு தலைவர் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரை ஆதரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.