சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் உயிர்த்தியாகம் செய்த தெலங்கானாவைச் சேர்ந்த ராணுவ கமாண்டிங் அதிகாரி சந்தோஷ் பாபுவின் இழப்பு தங்களுக்கு மிகப்பெரிய வேதனையைத் தந்துள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக லடாக் எல்லைப்பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையே பதட்டமான சூழல் நிலவிவந்த நிலையில், இந்திய ராணுவத்தினர் மீது சீன ராணுவத்தினர் திங்கள்கிழமை இரவு நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இரு நாட்டு உறவில் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், சீன ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த தெலங்கானாவைச் சேர்ந்த ராணுவ கமாண்டிங் அதிகாரி சந்தோஷ் பாபுவின் இழப்பு தங்களுக்கு மிகப்பெரிய வேதனையைத் தந்துள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள அவரது தாய், "முதலில், நாங்கள் அதை நம்பவில்லை, ஆனால் பின்னர் என்ன நடந்தது என்பதை உயர் அதிகாரிகள் எங்களிடம் சொன்னார்கள். நாங்கள் ஆழ்ந்த அதிர்ச்சியில் இருக்கிறோம். எங்கள் மகன் பல சவால்களை எதிர்கொண்டு வெற்றிபெற்றவர்" எனத் தெரிவித்துள்ளார்.
சந்தோஷ் பாபுவின் தந்தை உபேந்தர் இதுகுறித்து பேசுகையில், “நாங்கள் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தோம், எங்கள் மகன் மரணமடைந்த செய்தியை எங்களால் நம்ப முடியவில்லை. ஏனெனில் சந்தோஷ் மிகவும் தைரியமானவர். கடந்த 15 ஆண்டுகளாக அவர் பல சோதனைகளைக் கடந்து வந்துள்ளார். ராணுவத்தின் பல அதிகாரிகளும் எங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த போதுதான் எங்கள் மகன் உயிர்த்தியாகம் செய்தது தெரியவந்தது. இந்த ராணுவ அதிகாரிகள்தான் சந்தோஷ் உடலை சூரியாபேட் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்" எனத் தெரிவித்துள்ளார்.