இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், கேரளாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. இந்தியாவில் நேற்று (28.07.2021) ஒட்டுமொத்தமாக 43,509 கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இதில் 22,056 கரோனா பாதிப்புகள் கேரளாவிலிருந்து பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, ஏற்கனவே இருக்கும் கட்டுப்பாடுகளோடு சேர்த்து, வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே மத்திய அரசு, கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் கேரளாவிற்கு உதவ ஆறு பேர் கொண்ட குழுவை அனுப்பவுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா, "தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு கேரளாவிற்கு அனுப்பவுள்ளது. கேரளாவில் இன்னும் ஏராளமான கரோனா பாதிப்புகள் பதிவாகிவருவதால், கரோனாவைக் கட்டுப்படுத்த மாநில அரசு எடுத்துவரும் முயற்சிகளில் இந்தக் குழு உதவும்" என கூறியுள்ளார்.