பப்புக்கு தோழிகளுடன் சென்ற 17 வயது மாணவி ஆறு மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 28 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஒரு பப்புக்கு 17 வயது சிறுமி ஒருவர் அவரது தோழிகளுடன் சென்றுள்ளார். உடன் வந்த தோழிகள் பப்பை விட்டு வெளியே சென்ற பிறகும் அங்கிருந்த மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்த 17 வயது சிறுமி, காரில் அழைத்துச் சென்று வீட்டில் விடுவதாக மாணவர்கள் கூறியதை நம்பி அவர்களுடன் பென்ஸ் காரில் சென்றுள்ளார். பள்ளி மாணவியை ஏற்றிக்கொண்டு மாணவர்களுடன் சென்ற அந்த கார் முதலில் ஒரு பேக்கரியில் நின்றதாகவும், அதன் பிறகு ஜூப்ளி ஹில்ஸ் பகுதிக்குச் சென்றதாகவும், அதன் பின்னர் காரில் இருந்த மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் பள்ளி மாணவியை ஒரு இடத்தில் இறக்கி விட்ட பின் கார் சென்றுள்ளது.
வீடு திரும்பிய மாணவி கழுத்தில் காயம் இருப்பதைக் கண்ட சிறுமியின் தந்தை இதுகுறித்து மகளிடம் விசாரித்துள்ளார். விசாரணையில் சிலர் தாக்கியதாகச் சிறுமி மழுப்பலாக பதில் கூற, சிறுமியின் தந்தை இது குறித்து ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து சிறுமியிடம் பெண் காவலர்கள் விசாரணை நடத்தியதில் அவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதிப்படுத்தப்பட்டது. கூட்டுப் பாலியல் வன்கொடுமை ஈடுபட்டவர்களில் ஒருவர் சட்டமன்ற உறுப்பினரின் மகன் என்றும், அதேபோல் வக்ப் வாரியத் தலைவரின் மகன் என்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அந்த பப்புக்கு வெளியே பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீசார், மாணவியுடன் வெளியே நடந்து செல்லும் அந்த மாணவர்கள் யார் யார் என்பது குறித்த அடையாளங்களை சேகரித்தனர். மொத்தம் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சாதுத்தீன் மாலிக் என்பவரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தெலுங்கானாவில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.