சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதையடுத்து, பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கான வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.
அண்டை நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறையைப் பயன்படுத்தி இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அவற்றை அதிகமாக ஏற்றுமதி செய்யத் தொடங்கின. இதனால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க, பெட்ரோல், டீசலுக்கு கடந்த ஜூலை 1- ஆம் தேதி அன்று புதிதாக கூடுதல் ஏற்றுமதி வரியை மத்திய அரசு விதித்திருந்தது. இந்த நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக் குறைந்து வருவதால், பெட்ரோல், டீசல் மீதான ஏற்றுமதி வரியை மத்திய அரசு மீண்டும் குறைத்துள்ளது.
குறிப்பாக, பெட்ரோலுக்கு லிட்டருக்கு விதிக்கப்பட்டிருந்த ஏற்றுமதி வரி 6 ரூபாயை முழுவதுமாகவும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு விதிக்கப்பட்டிருந்த 13 ரூபாயை 11 ரூபாயாகவும் மத்திய அரசு குறைத்துள்ளது. அதேபோல், விமான எரிபொருளுக்கு விதிக்கப்பட்டிருந்த 6 ரூபாயை 4 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி உள்ளிட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் பங்குகளின் விலை அதிகரித்துள்ளது.