சென்னையில், கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.
டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்றார். இவரது பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மீதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
இந்த வழக்கு கடந்த 6 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இதற்காக அவர்களை பதவி நீக்கம் செய்ய முடியாது என்று கூறி நீதிபதி அனிதா சுமந்த் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், “நமது சமூகத்தில் உள்ள சாதிய அமைப்பு, கடந்த நூற்றாண்டில்தான் உருவாக்கப்பட்டது. அப்படியிருக்க, சாதிய கொடுமைகளுக்கு வர்ணாசிரமம் தான் காரணம் என பழி கூற முடியுமா? வர்ணாசிரமம் பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை; செய்யும் தொழிலின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டது. சனாதனம் என்பது அழிவற்ற நிலையான, ஒழுக்க நெறிகளை குறிக்கிறது. ஆனால் சனாதனம் பற்றி நீங்கள் பேசிய கருத்து முற்றிலும் தவறு” என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் சனாதன தர்மம் குறித்துப் பேசியது தொடர்பாக மத உணர்வுகளை உதயநிதி ஸ்டாலின் புண்படுத்திவிட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது பீகாரின் ஹர்ரா நகரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.