ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மீது, அமைதியை குலைக்கும் வகையில் பேசியதாக ஹைதராபாத் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆம் தேதி தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது, இந்தியா பாரம்பரியமாகவே இந்துத்துவ கொள்கையுடையது என்பதால் இந்தியாவின் 130 கோடி மக்களையும் இந்துக்களாகவே ஆர்.எஸ்.எஸ். கருதுகிறது என்றார். இந்த பேச்சு பல்வேறு தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு எதிராக காங்கிரஸ் நிர்வாகி வி.ஹனுமந்த ராவ் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
"ஆர்எஸ்எஸ் தலைவரின் பேச்சு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள் நம்பிக்கையையும், உணர்வுகளை மட்டும் பாதிக்கவில்லை. அரசியலமைப்பின் மாண்புக்கு எதிராகவும் இருக்கிறது. இந்தப் பேச்சு மத உணர்வுகளை மக்களிடையே தூண்டிவிட்டு, ஹைதராபாத்தில் சட்டம் ஒழுங்கு சிக்கலை ஏற்படுத்தும்" என அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.