பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் பிபிஎஸ்சி தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என ஆசிரியர் நியமனத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதற்குப் பீகாரில் கடும் எதிர்ப்புகள் எழுந்தது. அது மட்டுமில்லாமல் ஆசிரியர்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.
அதேபோன்று கடந்த 13 ஆம் தேதி ஆட்சியர் நியமனத்தில் திருத்தப்பட்ட மாற்றங்களைக் கண்டித்து பாஜகவினர் பாட்னாவில் போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டக்காரர்கள் காந்தி மைதானத்திலிருந்து அம்மாநில சட்டப்பேரவையை நோக்கி பேரணி செல்ல முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார், கூட்டத்தைக் கலைக்கத் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். நிலைமை கட்டுக்குள் வராததால் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்தன நிலையில் பாஜக நிர்வாகி ஒருவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் பாஜக நிர்வாகி உயிரிழந்தது தொடர்பாக முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகிய இருவர் மீது பாஜகவைச் சேர்ந்த கிருஷ்ணா சிங் கல்லு என்பவர் பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.