தேர்தல் சமயங்களில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடா செய்வதை, எத்தனை முயற்சி எடுத்தும் தடுக்க முடியவில்லை. நவீன முறையில் டோக்கன் வசதியுடன் பணப்பட்டுவாடா நடப்பதை, நாமும் பல செய்திகளில் பார்த்திருப்போம். தேர்தல் முடிந்த பிறகு வாக்காளருக்கும் வேட்பாளருக்குமான இந்த உறவு(!) என்பது முறிந்துவிடுகிறது. ஆனால், தங்களுக்கு வாக்காளிக்காதவர்கள் பணத்தைத் திருப்பித் தரவேண்டும் என வேட்பாளர்கள் களத்தில் குதித்தால் என்னவாகும்? அப்படியொரு சம்பவம்தான் தெலுங்கானா மாநிலத்தில் நடந்திருக்கிறது.
தெலுங்கானா மாநிலம் சூரியப்பேட் மாவட்டத்தில் உள்ளது ஜாஜிரெட்டிகுடெம் கிராமம். இங்கு நடைபெற்ற வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில், ஹீமாவதி என்பவர் போட்டியிட்டார். இவரது கணவர் உப்பு பிரபாகர். மதுபான விற்பனையாளரான இவர், சமீபத்தில்தான் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டார். தேர்தலில் போட்டியிட்ட தனது மனைவிக்காக வாக்கு சேகரிக்கச் சென்ற பிரபாகர், மதுபாட்டில்கள், பணத்தோடு நம்பத்தகுந்த(!) 110 வாக்காளர்களைச் சந்தித்து, ஹீமாவதியின் சின்னமான ‘ஜக்’கையும் கொடுத்து வந்துள்ளார் (ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் விநியோகம் செய்யப்பட்டதைப் போலவே).
கடந்த ஜனவரி 25ஆம் தேதி நடந்துமுடிந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சில தினங்களுக்கு முன் நடந்தது. அதில் மொத்த வாக்குகளான 269ல் ஹீமாவதிக்கு வெறும் 26 வாக்குகளே கிடைத்திருந்தன. இதனால் ஆத்திரமடைந்த பிரபாகர், தான் பணம் கொடுத்த வாக்காளர்களை முறையிட்டிருக்கிறார். மஞ்சள் நனைத்த அரிசியை தான் பணம் கொடுத்த வீடுகளுக்கு எடுத்துச் சென்று, ஹீமாவதிக்கு வாக்களித்தீர்களா? என சத்தியம் கேட்டிருக்கிறார். இல்லை என்பவர்கள் சத்தியம் செய்ய தயங்கியதோடு, தாங்கள் பெற்ற பணத்தையும் திரும்பக் கொடுத்துவிட்டனர்.
இப்படியாக ரூ.800 வீதம் வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்தை பிரபாகர் திரும்பப் பெற, அந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவிட்டது. இதைப் பார்க்கும் பொதுமக்கள் பிச்சைக்காரத்தனமா இருக்கே என்றும், இனிமே ஓட்டுக்கு காசு வாங்கினா இதுதான் நிலைமை என்றும் விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த பிரபாகர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
வாக்குகள் விற்பனை செய்யப்பட்டு, தேர்தல் ஜனநாயகம் கேலிக்கூத்தாக மாறி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. அதில் ஒரு சிறிய உதாரணம்தான் தெலுங்கானா சம்பவம்.