கரோனா வைரஸ் உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 22 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை இந்த வைரஸ் காரணமாக 14,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதை கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி சமூகவிலகல் என்பதால் இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் மக்களிடம் இதையே வலியுறுத்தி வருகின்றன. முன்னெச்சரிக்கையாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டு, போக்குவரத்து முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் சரக்கு விமான போக்குவரத்து மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், ஏர் இந்தியா உட்பட அனைத்து விமானங்களும் பயணிகள் சேவையை முழுமையாக நிறுத்தி வைத்தன. தற்போது உள்நாட்டு விமான சேவைக்கு மே 4-ம் தேதி முதலும், வெளிநாட்டு விமான சேவைக்கு ஜுன் 1-ம் தேதி முதலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.