மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கேரளாவின் வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். இன்று காலை விமானம் மூலம் கோழிக்கோடு வந்த ராகுல் காந்தி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வயநாடு சென்றார். அதன்பின் தொண்டர்களுடன் பேரணியாக சென்று ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். வேம்புமனு தாக்கல் செய்யும் போது அவருடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் உடன் வந்திருந்தார். மேலும் இந்த வேட்புமனு தாக்கல் நிகழ்வுகளில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி, பொதுச்செயலாளர்கள் உம்மன்சாண்டி, கே.சி.வேணுகோபால், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.