படுக்கையறையில் கேமரா வைப்பது, வாய்ஸ் ரெக்கார்டர் வைப்பது உள்ளிட்ட கணவனின் சந்தேக கொடுமையால் பெண் ஊடகவியலாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா காசக்கோடு பகுதியைச் சேர்ந்த ஸ்ருதிக்கும் கேரளா தலிப்பறம்பு பகுதியைச் சேர்ந்த அனீஸ் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சுருதி பெங்களூரூவில் ஒரு பிரபல பத்திரிகையில் சீனியர் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தார். திருமணமான முதல் நாளிலிருந்தே அனீஸ் ஸ்ருதியிடம் சந்தேகத்துடன் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. படுக்கையறைக்குள் கேமரா வைப்பது, வாய்ஸ் ரெக்கார்டர் வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அதேபோல் குடும்ப சண்டையின் பொழுது இரண்டு முறை ஸ்ருதியை கொலை செய்யவும் அனீஸ் முயன்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பலமுறை ஸ்ருதியின் தயார் செல்போனில் அழைத்த போதும் ஸ்ருதி செல்போனை எடுக்கவில்லை. இதனால் பயந்துபோன அவரின் தயார் அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலாளிக்கு போன் செய்து தெரிவித்துள்ளார். பின்னர் ஸ்ருதி தங்கியிருந்த வீட்டில் கதவு உள்பக்கம் தாளிடப்பட்டிருந்த நிலையில் கதவை திறக்கவில்லை. இதனால் பால்கனி வழியாக சென்று கதவை உடைத்த பொழுது ஸ்ருதி தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஸ்ருதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்த நிலையில் சைக்கோ கணவன் அனீஸ் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.