கொல்கத்தாவின் முக்கிய பகுதியான ரசல் தெருவில், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று, செவன் ஸ்டார் ஹோட்டல் கட்டுவதற்காக 62 மரங்களை சட்டவிரோதமாக வெட்டி சாய்த்தது தொடர்பான வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்தநிலையில், கடந்த பிப்ரவரி மாதம் மரங்களை வெட்டிய அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.
அந்த மனுவில், தாங்கள் முதல்முறையாக இந்த தவறை செய்துள்ளதாக குறிப்பிட்டதோடு, 62 மரங்களை வெட்டியதற்கு இழப்பீடாக அதைவிட இரட்டிப்பான மரங்களை நடுவதாகவும், எனவே தங்களுக்கு எதிரான விசாரணையைக் கைவிட வேண்டுமென்றும் அந்நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜசேகர் மந்தா, மரங்களை வெட்டியது தொடர்பான வழக்கைக் கைவிட ரியல் எஸ்டேட் நிறுவனம் 15 நாட்களுக்குள் 40 கோடி அபராதம் செலுத்த வேண்டுமெனவும் 100 மரங்களை நட வேண்டுமென்றும் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார்.
"மனுதாரர்களுக்கு (மரத்தை வெட்டியவர்களை) சிறை தண்டனை விதிப்பது, வெட்டப்பட்ட மரங்களைத் திரும்ப கொண்டுவராது என்பதைக் கருத்தில் கொள்ளும்போது, மாநிலம் அல்லது வனத்துறை அல்லது சமூகத்திற்கு இழப்பீடு வழங்குவதே நியாயமான தண்டனையாக இருக்கும். இந்த இழப்பீட்டை பொதுவாக சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கும், சட்ட விரோதமாக மரங்களை வெட்டுவதற்கு எதிரான கண்காணிப்பை சிறப்பாக பராமரிப்பதற்கும் பயன்படுத்தலாம்" என நீதிபதி ராஜசேகர் மந்தா தனது தீர்ப்பில் கூறியுள்ளார். மேலும், 15 நாட்களுக்குள் 40 கோடியை செலுத்துவதோடு 100 மரங்களை நடாவிட்டால், குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்ட விரோதமாக மரம் வெட்டினால், அம்மாநில சட்டப்படி நீதிமன்றம் 5,000 அபராதமோ, ஓராண்டு சிறை தண்டனையோ, அல்லது இரண்டுமோ விதிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வெட்டப்பட்ட அளவிற்கான மரங்களை அதை வெட்டியவர் திரும்ப நட வேண்டும். அதுவரை தினமும் 50 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்பது குறிபிடத்தக்கது.