கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு பின் பிரதமர் மோடிக்கு ஆதரவாக 65 சதவீதம் மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக சி-வோட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பில், சிறப்பாகச் செயலாற்றும் முதல்வராக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மாநிலம் தோறும் தலா 3,000 பேரிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டு சி-வோட்டர் நடத்திய இந்தக் கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடிக்கு 65.69 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக ஒடிசாவில் 95.6 சதவீத மக்களும், இமாச்சல பிரதேசத்தில் 93.95% மக்களும், சத்தீஸ்கரில் 92.73% மக்களும் பிரதமர் மோடியை ஆதரித்துள்ளனர். அதேநேரம் குறைந்தபட்சமாக கேரளாவில் 32.89% மக்களும், தமிழகத்தில் 32.15% மக்களும் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக தேசிய அளவில் 0.58 சதவீதம் மக்கள் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர்களின் செயல்பாடுகளைப் பொருத்தவரை, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சிறப்பாகச் செயல்படுவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவருக்கு 82.96 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தப் பட்டியலில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அதேபோல, மக்களின் அதிருப்தியை பெற்ற முதல்வர்களின் பட்டியலில் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், தமிழக முதல்வர் பழனிசாமி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.