வங்கதேசத்திலிருந்து மேற்கு வங்கத்தின் மால்டா பகுதிக்குள் நேற்று (10.06.2021) சீனாவைச் சேர்ந்த நபர் ஊடுருவ முயன்றுள்ளார். அவரை தடுத்து நிறுத்திய இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அந்த நபர் அளித்த பதில்கள் திருப்தியளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த அமைப்புகளும் அவரிடம் விசாரணை நடத்தின. இதில் எல்லையில் ஊடுருவ முயன்ற 35 வயதான அந்த நபர், தனது பெயர் ஹான் ஜுன்வே எனவும், சீனாவின் ஹூபேயில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்த பாஸ்போர்ட்டில் அவர் ஜூன் 2ஆம் தேதி வங்கதேசத்திற்கு வந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. எல்லையில் ஊடுருவ முயன்ற அந்த நபர், ஜூன் 2ஆம் தேதி வங்கதேசத்திற்கு வந்து சீன நண்பர் ஒருவருடன் தங்கியிருந்துள்ளார்.
ஜூன் 8ஆம் தேதி, வங்கதேசத்தின் சோனா மஸ்ஜித் மாவட்டம், சபைநவப்கஞ்ச் பகுதிக்கு வந்து அங்கே தங்கியிருந்துள்ளார். பிறகு ஜூன் 10ஆம் தேதி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றபோது பிடிபட்டுள்ளார். விசாரணையின்போது அவர், தான் இதற்கு முன்பாக நான்குமுறை இந்தியா வந்துள்ளதாக கூறியுள்ளார். 2010இல் ஹைதராபாத்திற்கும், 2019க்குப் பிறகு மூன்றுமுறை குருகிராம், டெல்லிக்கு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். தனது தொழில்கூட்டாளி, லக்னோவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடுருவ முயன்ற நபர் மீது ஏற்கனவே இந்தியாவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு இந்திய விசா கிடைக்கவில்லை. அதேநேரத்தில் வங்கதேசம், நேபாளதிற்கு விசா கிடைத்துள்ளது. அதன்மூலம் வங்கதேசம் வந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், எல்லை பாதுகாப்புப் படையினர், அவரிடம் மின்னணு கருவி ஒன்றைப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர் சீன உளவாளியாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.