
இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராகச் செயல்பட்டு வந்த பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் மற்றும் தேசியப் பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டம் நடத்தினர். அதன்பின்பு பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் (354 ஏ) பின்தொடர்தல் (354 டி), பாலியல் ரீதியாகப் பலவந்தப்படுத்துதல் (354) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து எம்.பி.பிரிஜ்பூஷண் சிங்கை எம்.பி பதவியில் இருந்து நீக்கி உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று மீண்டும் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மல்யுத்த வீரர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்தனர்.
இந்த நிலையில்தான் கடந்த ஜூன் 15 ஆம் தேதி பிரிஜ்பூஷண் சிங் மீது டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணையைத் தொடர்ந்தனர். இன்று, டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, டெல்லி போலீஸ் தரப்பில் இருந்து வாதிட்ட வழக்கறிஞர், “எம்.பி. பிரிஜ்பூஷண் சரண்சிங் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றுள்ளார்” என்றார்.
தஜிகிஸ்தானில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின்போது நடைபெற்ற சம்பவத்தைக் குறிப்பிட்டு வாதிட்ட போலீஸ் தரப்பு வழக்கறிஞர், தஜிகிஸ்தானில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பிரிஜ்பூஷண் சரண்சிங் ஒரு மல்யுத்த வீராங்கனையை அறைக்கு அழைத்துச் சென்று தவறாக நடந்துகொண்டிருக்கிறார். பிறகு தந்தை போல் பழகினேன் என்று கூறியிருக்கிறார். மேலும் அங்கு நடைபெற்ற வேறொரு நிகழ்ச்சியின்போதும் மற்றொரு வீராங்கனையிடமும் தவறாக நடந்துகொண்டிருக்கிறார்” என்றார். இதனைத் தொடர்ந்து வாதங்களைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை அக்டோபர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.