Skip to main content

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம்? - சிக்கலில் மொய்த்ரா எம்.பி.!

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

Bribery to raise questions in Parliament to complaint against moitra

 

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, தொழிலதிபரிடம் லஞ்சம் பெற்றதாக பா.ஜ.க எம்.பி. நிஷகாந்த துபே குற்றம் சாட்டியுள்ளார். 

 

மேற்கு வங்க எம்.பி. மஹூவா மொய்த்ரா, அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே, மக்களைவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு  கடிதம் எழுதியுள்ளார். 

 

இது குறித்து அவர் எழுதிய அந்த கடிதத்தில், "நாடாளுமன்றம் நடைபெறும் போதல்லாம் மஹூவா மொய்த்ரா அவை நடவடிக்கையை சீர்குலைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். நாடாளுமன்றத்தில் சாதாரண மக்களின் பிரச்சனைகள் மற்றும் அரசு கொள்கைகள் குறித்து விவாதிப்பதை தடுக்கும் வகையில் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மஹூவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு தொழிலதிபரான ஹிரானந்தனிடம் இருந்து பணம் பெற்றுள்ளார்.

 

ஹிரானந்தனி நிறுவனம், தனது நிறுவனத்தின் ஆற்றல் மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றை அதானி நிறுவனத்திடம் இழந்துள்ளது. அதனால், மொய்த்ராவின் கேள்விகள் அனைத்தும் ஹிரானந்தனி நலனுக்காக தான் இருந்திருக்கிறது. இதற்காக ரூ.2 கோடி பணம் மற்றும் விலை உயர்ந்த ஐ ஃபோன் போன்ற பரிசு பொருட்களை ஹிரானந்தனி நிறுவனம் மொய்த்ராவுக்கு தந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூ. 75 லட்சம் மொய்த்ராவுக்கு, ஹிரானந்தனி நிறுவனம் கொடுத்துள்ளது. 

 

கடந்த 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மொய்த்ரா நாடாளுமன்றத்தில் 61 கேள்வி கேட்டுள்ளார். அதில் 50 கேள்விகள் தர்ஷன் ஹிரானந்தனிக்கு சாதகமான கேள்விகளே கேட்கப்பட்டுள்ளது. எனவே, அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணை குழு அமைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையில், பா.ஜ.க எம்.பி. வைத்துள்ள குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மொய்த்ரா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “எந்த வகையான விசாரணையாக இருந்தாலும் நான் வரவேற்கிறேன். பா.ஜ.க. தலைவர்கள் மீதான பல உரிமை மீறல் நோட்டீஸ்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. எனவே, அவர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுத்த பின்பு என் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். அமலாக்கத்துறை, சி.பி.ஐ. என் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு அதானி ஊழல்களில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யும் என காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்