முற்றிலும் இலவசமாக இருந்தாலும், பணம் இருந்தால்தான் சிகிச்சை பெறமுடியும் என்ற நிலையில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன பெரும்பாலான அரசு மருத்துவமனைகள். அப்படி ஒரு சம்பவம்தான் உத்தரப்பிரதேசத்திலும் நடந்தேறியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ளது பண்டா மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு பணமில்லாமல் சிகிச்சை மறுத்ததால், சிறுவன் உயிரிழந்துள்ளான். அரசு மருத்துவமனைதான் என்றாலும், எல்லாவற்றிற்கும் தனித்தனி கட்டணம் செலுத்தவேண்டும் என நிர்பந்தித்ததால் உரிய சிகிச்சை கிடைக்காமல், சிறுவனின் உயிர் மருத்துவமனையில் வைத்தே பிரிந்துள்ளது.
இதுகுறித்து சிறுவனின் தந்தை பேசுகையில், ‘என்னிடம் போதுமான பணம் இல்லாததால் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர். இங்கு எந்த விஷயத்திற்கும் காசுக்கு மட்டுமே மதிப்பளிக்கப்படுகிறது’ என தெரிவித்துள்ளார். மேலும், சிறுவனின் உடலை எடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற பெற்றோர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தநிலையில், அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் தரம்சார்ந்த குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், இந்த செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.