இந்தியாவின் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி இந்தியா முழுதும் சுமார் 12 மாநிலங்களில் 3,570 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த பயணத்திற்கான திட்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு கன்னியாகுமரியிலிருந்து நடைபயணத்தை செப் 7 அன்று ராகுல் துவங்கினார்.
குமரி முதல் காஷ்மீர் வரை இந்த பயணம் 150 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட இருக்கிறது. தமிழகத்தில் நடைப்பயணத்தை முடித்து கேரளாவிற்கு சென்ற ராகுல் காந்திக்கு வழி நெடுகிலும் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 8 வது நாளான நேற்று கொல்லம் மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் பாஜக கேடு விளைவிப்பதாக கூறினார். காங்கிரஸ் கட்சிக்கு ராகுலின் நடைபயணம் புத்துணர்ச்சி அளிப்பதாக ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். மேலும் ராகுல் காந்தி 8 நாட்கள் தொடர்ந்து நடந்ததால் காலில் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளது எனவும் இன்று ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் அவரது பயணத்தை திட்டமிடும் குழு கூறியுள்ளது.
இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்ட ஜெய்ராம் ரமெஷ், “பாரத் ஜூடோ யத்திரைக்கு இன்று ஓய்வு தினம். எனினும் கடந்த வார நடைபயணங்களை குறித்து காலை 9 மணி முதல் 9 குழுக்களாக பிரிந்து விவாதிக்கின்றனர். இரவு 7 மணிக்கு அடுத்த வார பயணத்தை குறித்து விவாதிக்க இருக்கின்றனர்.” என கூறியுள்ளார்.