தேர்தல் அறிவிக்கும் முன்னரே சத்தீஸ்கரில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பாஜக.
நேற்று இரவு பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோர் கலந்து கொண்ட முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லி பாஜக தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் இந்த வருட இறுதியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் அடுத்த வருட மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜகவின் சார்பாக போட்டியிட வேண்டியவர்கள் யார் என்ற ஆலோசனையும் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அந்த கூட்டத்தில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட ஒப்புதல் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்பொழுது முதல் கட்டமாக 39 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது சத்தீஸ்கர் பாஜக. தேர்தல் தேதியே இன்னும் அறிவிக்காத நிலையில், சத்தீஸ்கரில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.