
உத்தரகாண்ட் மாநில முதலமைச்சராக இருந்த தீரத்சிங் ராவத் பதவியேற்று ஆறு மாதத்தில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாக முடியாத சூழல் ஏற்பட்டதால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, டேராடூனில் இன்று (03/07/2021) பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பா.ஜ.க. சட்டமன்றக் கட்சித் தலைவராகவும், புதிய முதலமைச்சராகவும் புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் மாநில ஆளுநரைச் சந்திக்கும் புஷ்கர் சிங் தாமி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். பின்னர், சட்டமன்ற உறுப்பினர்களின் கடிதத்தைப் பரிசீலிக்கும் ஆளுநர், பதவியேற்க வருமாறு புஷ்கர் சிங் தாமி அழைப்பு விடுப்பார். அதன் தொடர்ச்சியாக புஷ்கர் சிங் தாமி முதலமைச்சராகப் பதவியேற்பார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். முதலமைச்சர் தலைமையிலான புதிய அமைச்சரவையும் பதவியேற்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடக்கவுள்ளதால் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.