Skip to main content

மஜத 2 எம்.எல்.ஏக்களை பாஜகவினர் கடத்திவிட்டனர்: குமாரசாமி குற்றச்சாட்டு

Published on 19/05/2018 | Edited on 19/05/2018


மஜத 2 எம்.எல்.ஏக்களை பாஜகவினர் கடத்திவிட்டனர் என அக்கட்சியின் கர்நாடகா மாநிலத் தலைவர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், இழுபறி நிலை ஏற்பட்டது. இதையடுத்து பாஜகவும், காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளமும் தனித்தனியாக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரின. ஆனால், ஆளுநர் வஜுபாய் வாலா பாஜகவின் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.

எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக காங்கிரஸ் - மஜத கூட்டாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நள்ளிரவு விசாரிக்கப்பட்டது. இதில் எடியூரப்பா பதவி ஏற்பதற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும் பதவியேற்பு வழக்கு இறுதித்தீர்ப்புக்கு உட்பட்டது என உத்தரவிட்டது. இதைதொடர்ந்து கர்நாடகாவின் 23வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார்.

இதையடுத்து, எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அர்ஜன் குமார் சிக்ரி, இன்று மாலை 4 மணிக்கு இரண்டு கட்சிகளும் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதனிடையே பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளில் உள்ள எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால், பாஜகவின் குதிரைப் பேரத்தில் இருந்து தங்கள் எம்.எல்.ஏக்களை பாதுகாக்க மஜத மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடும் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர். இருப்பினும் மதசார்பற்ற ஜனதாதளத்தை சேர்ந்த 2 எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த மஜத கர்நாடகா மாநிலத் தலைவர் குமாரசாமி,

மஜத 2 எம்.எல்.ஏக்களை பாஜகவினர் கடத்திவிட்டனர். கடத்தப்பட்ட 2 மஜத சட்டமன்ற உறுப்பினர்களும் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது அதற்கான பட்டியலை ஆளுநரிடம் அளித்துள்ளோம். கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளத்திற்கு போதிய பலம் உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 2000; காங்கிரஸை விமர்சிக்கும் குமாரசாமி

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

 kumarasamy talks about karnataka family women 2 thousand amount scheme

 

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து இருந்தது. இதையடுத்து நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து சித்தராமையா முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு பதவியேற்ற உடனே பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், இளைஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை நிறைவேற்றி அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்தது.

 

இதையடுத்து கர்நாடகாவில் அமல்படுத்த உள்ள இலவச மின்சார திட்டம் சொந்தமாக வீடு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் பொருந்தாது என்று மக்கள் மத்தியில் வதந்தி பரவியது. அதனைத் தொடர்ந்து முதல்வர் சித்தராமையா ட்விட்டரில், "வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் பொருந்தும். வறுமைக்கோட்டுக்கு கீழ் மற்றும் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பத் தலைவிகள் ரூ.2,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். ஆனால் வருமான வரி செலுத்துவோர் மற்றும் ஜிஎஸ்டி பதிவு செய்தவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற முடியாது" எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் பெங்களூருவில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இது குறித்து அவர் பேசுகையில், "நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி கூறியது என்ன. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் மற்றும் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றனர். வீடுகளுக்கு 200 அலகு மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றனர். ஆனால் தற்போது காங்கிரஸ் அரசு இந்த திட்டங்களுக்கு பல்வேறு விதிமுறைகளை வகுத்து வருகிறது.

 

தற்போது சமூக வலைத்தளங்களில் தோசை கதை வைரலாகி வருகிறது. அதாவது ஹோட்டல்களில் தோசை இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து விட்டு அதே நேரம் தோசைக்கு வைக்கும் சட்னிக்கு அதிக விலை வாங்குகிறார்களாம். அதுபோல தான் காங்கிரஸ் தேர்தல் நேரத்தில் இலவச திட்டங்கள் நிபந்தனையின்றி வழங்கப்படும் என்று அறிவித்து விட்டு தற்போது விதிமுறைகளை வகுத்து வருகின்றனர். வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி செலுத்துபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் பணம் கிடைக்காது என்று முதல்வர் கூறுகிறார். இது குறித்து மக்களிடம் எடுத்து கூறுவேன்" என்று தெரிவித்துள்ளார்.  


 

Next Story

"பாஜகவுக்கு எதிரான அலை" - சரத் பவார் 

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

nationalist congress cheif Sharad Pawar says anti bjp wave is sweeping

 

கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தனித்து நின்று தேர்தலை சந்தித்தன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடத்தி வருகிறது. இந்தத் தேர்தல் முடிவானது வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.

 

மேலும் இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டும், அதே சமயம் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தேர்தல் முடிவை பார்க்கும் போது மக்கள் மாற்றத்தை விரும்புவது தெரிகிறது. ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதால் நாட்டில் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது. இதை சொல்வதற்கு ஜோதிடர் தேவை இல்லை. கர்நாடக தோல்வியை தொடர்ந்து மத்தியில் பாஜக வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தும். மேலும் நாடாளுமன்ற தேர்தலுடன், மாநில சட்டமன்ற தேர்தல்களையும் சேர்த்து நடத்தும் திட்டம் குறித்து குழப்பி கொள்ள வாய்ப்பில்லை " எனத் தெரிவித்துள்ளார்.