நேற்று பெங்களூருவில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா தொடர்பான ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் பாஜக வின் எடியூரப்பா சார்பில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ க்கு பணத்தாசை காட்டி ஆளும் கட்சிக்கான ஆதரவை அந்த எம்.எல்.ஏ விலக்கிக்கொள்ள வேண்டும் என பேசியது பதிவாகி இருந்தது. அதற்காக 25 லட்சம் வரை தருவதாக பேரம் பேசப்பட்டதும் அதில் இருந்தது. இந்த விவகாரம் நேற்று கர்நாடக அரசியலில் மட்டும் இல்லாமல் தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.எல்.ஏ அரவிந்த் லிம்பாவலி, ' முதல்வர் குமாரசாமி மேலவை உறுப்பினர் பதவிக்கு ஒருவரிடம் 25 கோடி லஞ்சம் கேட்டார். அதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. அதனை வரும் திங்கள்கிழமை வெளியிடுவேன்' என கூறினார். ஏற்கனவே வெளிவந்த ஆடியோ விவகாரம் சூடு அடங்குவதற்குள்ளாகவே அடுத்து கிளம்பியுள்ள இந்த வீடியோ விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.