ஆம்புலன்சை நிறுத்தி டிரைவருடன் வாக்குவாதம் செய்த பா.ஜ.க. பிரமுகர்: நோயாளி இறப்பு
அரியானா மாநிலம் பதேகாபாத் நகரில் இதய நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ், உள்ளூர் பா.ஜ.க. பிரமுகரும் நகராட்சி கவுன்சில் தலைவருமான தர்ஷன் நாக்பால் சென்ற கார் மீது லேசாக மோதிவிட்டு சென்றுள்ளது. ஆத்திரமடைந்த தர்ஷன் நாக்பால், அந்த ஆம்புலன்சை நிறுத்தி வாக்குவாதம் செய்ததாகவும், இதனால் ஏற்பட்ட தாமதத்தால் ஆம்புலன்சில் இருந்த நோயாளி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த நோயாளியின் உறவினர் ஒருவர் இதுபற்றி கூறும்போது, ஆம்புலன்சை துரத்தி வந்து தடுத்து நிறுத்திய பா.ஜ.க. பிரமுகர் தர்ஷன நாக்பால், டிரைவருடன் வாக்குவாதம் செய்தார். எங்களை போகவிடும்படி கூறியும் அவர் கேட்கவில்லை. இதன் காரணமாக 30 நிமிடம் தாமதம் ஆனது. அதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே நோயாளி இறந்துவிட்டார் என்றார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.