உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏ. மீது பாலியல் புகார் வழங்கியிருந்த பெண்ணின் தந்தை சிறையில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

நேற்று உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் முன்பு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறினர். அவர்களில் இளம்பெண் ஒருவர் தன்னை பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செகர் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் வேண்டுகோள் விடுத்தனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை காவலர்கள் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
ஆனால், உடல் நலக்குறைவு, வயிற்றுவலி போன்ற காரணங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணைக்காக கூட்டிச் சென்று, தனது தந்தையைக் காவல்துறையினர் கொன்றுவிட்டதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
உபி மாநிலத்தை உலுக்கி யிருக்கும் இந்த சிறை மரணத்தில் தொடர்புடைய இரண்டு காவல்துறை அதிகாரிகள், 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார்.