பா.ஜ.க.வின் தேசிய தலைவர் பதவியில் ஜெகத் பிரகாஷ் நட்டா மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அமைச்சராக இருந்த ஜெ.பி.நட்டா, கடந்த 2020- ஆம் ஆண்டு ஜனவரியில் பா.ஜ.க.வின் தேசிய தலைவராகப் பதவியேற்றார். அவரது மூன்று ஆண்டு பதவிக்காலம் வரும் ஜனவரி மாதத்துடன் நிறைவடைகிறது. ஜெ.பி.நட்டாவின் செயல்பாடுகளில் திருப்தி அடைந்துள்ளதால், அவரது பதவிக்காலத்தை நீட்டிக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது.
மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும், அதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இதுபோன்ற சூழலில் ஜெ.நட்டாவே தலைவராக நீடிப்பது சரியாக இருக்கும் என கட்சியின் மூத்த தலைவர்கள் கருதுகின்றன. இது குறித்து, பா.ஜ.க.வின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் விரைவில் முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.