கர்நாடகாவில் தேர்தலில் தோற்கடித்த குறிப்பிட்ட சமூகத்திற்கு தக்கப் பாடம் புகட்டுவேன் என தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதியில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களிலும், பாஜக 66 இடங்களிலும், மஜத 19 இடங்களிலும் வெற்றி பெற்றன. தென்னிந்தியாவில் பாஜக கைவசம் இருந்த ஒரே மாநிலம் கர்நாடகாதான். தற்போது அங்கு பாஜகவை வீழ்த்தி இழந்த ஆட்சியை காங்கிரஸ் மீட்டெடுத்துள்ளது. இதில் பாஜக ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் 15 பேர் தேர்தலில் தோல்வியடைந்தது பாஜக தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பாஜக வேட்பாளரின் பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஹாசன் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பாஜக வேட்பாளர் பிரீத்தம் கவுடா, தேர்தலில் என்னை தோற்கடித்த குறிப்பிட்ட சமூகத்திற்கு தக்க பாடம் புகட்டுவேன். ஒரு குறிப்பிட்ட மக்கள் நமக்கு தீர்ப்பு வழங்கியுள்ளனர். நான் நேர்மையாக அனைத்து சமூகங்களையும் அன்புடனும் நம்பிக்கையுடனும் அழைத்துச் செல்ல முயற்சித்தேன். ஆனால், அவர்கள் என்னை தோற்கடித்து விட்டார்கள். அந்த மக்களுக்கு வரும் நாட்களில் நாங்கள் யார் என்று காட்டுவோம் என்று கூறியுள்ளார். இவர் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர் ஸ்வரூப் பிரகாஷிடம் 7,854 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.