உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் குன்வர் சர்வேஸ் குமார் (வயது 72) உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். சமீபத்தில் இவருக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இது தொடர்பான பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மொராதாபாத் தொகுதிக்கு முதல் கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. குன்வர் சர்வேஸ் உள்ளிட்ட 12 பேர் மொராதாபாத் தொகுதியில் வேட்பாளர்களாக களம் கண்ட நிலையில் இவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குன்வர் சர்வேஸ் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019 வரை மொராதாபாத் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தார். ஐந்து முறை எம்எல்ஏவாகவும் இவர் இருந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். குன்வர் சர்வேஸ் குமார் மறைவுக்கு உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.