கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சியின் தலைவருமான குமாரசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், நான் முதலமைச்சராக இருந்தபோது ராமநகர் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்குமாறு முதலமைச்சர் எடியூரப்பாவிடம் கேட்டேன். அதை எடியூரப்பா ஏற்றுக் கொண்டுள்ளார். நான் தனிப்பட்ட முறையில் எந்த உதவியும் கேட்கவில்லை. தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்குத் தான் நிதி கேட்டேன். எனது அரசியல் செல்வாக்கைக் காப்பாற்ற வேண்டும் அல்லவா?.
கரோனா நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதைத் தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நான் ஆதரவு வழங்குவதாக ஏற்கனவே கூறியுள்ளேன். நான் அரசுக்குச் சிக்கல் கொடுத்தால், மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். பா.ஜனதாவுடன் நான் கூட்டணி சேரவில்லை. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நான் அரசுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறினேன்.
அரசை விமர்சிப்பதை விட அரசு என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூற வேண்டும். முன்வரும் நாட்களில் அரசின் தவறுகளைக் கண்டித்து போராடலாம். ராஜஸ்தான் அரசைக் கவிழ்ப்பதைக் கண்டித்து இங்குள்ள காங்கிரசார் போராட்டம் நடத்துகிறார்கள். இதனால் கர்நாடக மக்களுக்கு என்ன பயன்?
கர்நாடக மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து காங்கிரசார் போராட்டம் நடத்த வேண்டும். காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதற்கு பதிலாக பா.ஜனதாவுடன் கூட்டு சேர்ந்திருந்தால் நான் 5 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்திருப்பேன். ஆனால் தேவேகவுடாவின் பேச்சுக்கு மரியாதை கொடுத்து காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டோம்.
நான் ஆரம்பம் முதலே காங்கிரசுக்கு எதிராகவே போராடி வருகிறேன். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கடந்த சட்டசபை தேர்தலுக்குப் பிறகு அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டோம். காங்கிரசாரின் சதியால் தேர்தலில் எங்களால் இலக்கை அடைய முடியவில்லை. வெறும் விளம்பரத்திற்காக காங்கிரசார் போராட்டம் நடத்துகிறார்கள். சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் அவர்கள் போராட்டம் நடத்துவது சரியா?.
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எடியூரப்பா தனிக்கட்சி ஆரம்பித்து போட்டியிட்டதால், காங்கிரஸ் வெற்றி பெற்றது. இல்லாவிட்டால் அக்கட்சிக்கு முழுப் பெரும்பான்மை கிடைத்திருக்காது. இவ்வாறு கூறினார்.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 38 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற குமாரசாமி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 78 எம்.எல்ஏக்களின் ஆதரவுடன் ஓராண்டு முதலமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.